PUBLIC AWARENESS

UPI - மக்களை கவலையை விடுங்க.. இந்த 5 விஷயம் இன்னுமும் இலவசம் தான்..!

By ASWATHTHAMAN N • 2026-09-16 09:40 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
UPI - மக்களை கவலையை விடுங்க.. இந்த 5 விஷயம் இன்னுமும் இலவசம் தான்..!

யூபிஐ MDR கட்டணம்: தொடர்ந்து இலவசமாக இருக்கும் 5 முக்கிய சேவைகள்

எப்படி ஸ்மார்ட்போன், டிவி, பைக், கார் போன்றவை நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளதோ, அதேபோல் யூபிஐ பேமெண்ட் முறையும் தினசரி பயன்படுத்தும் முக்கிய சேவையாக மாறிவிட்டது. பெட்டிக்கடை முதல் நகைக்கடை வரை பல்வேறு இடங்களில் யூபிஐ பேமெண்ட் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய MDR கட்டண விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

மத்திய அரசின் புதிய UPI கட்டமைப்பின்படி, ₹2,000-க்கு மேல் உள்ள குறிப்பிட்ட Person-to-Merchant (P2M) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR பொருந்தும். ₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச MDR ₹300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த MDR வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை.

அதே நேரத்தில், சாமானிய மக்களையும் சிறு வியாபாரிகளையும் பாதுகாக்கும் வகையில் பல UPI சேவைகள் தொடர்ந்து கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான 5 அம்சங்கள் பின்வருமாறு:

1. தனிநபர்-தனிநபர் பணப் பரிமாற்றம் இலவசம்

ஒரு தனிநபரிடமிருந்து மற்றொரு தனிநபருக்கு மேற்கொள்ளப்படும் Person-to-Person (P2P) UPI பரிவர்த்தனைகளுக்கு MDR அல்லது பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படாது. பரிவர்த்தனை தொகை எவ்வளவு இருந்தாலும் P2P UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.

எனினும், வங்கிகள் மற்றும் NPCI நிர்ணயிக்கும் தினசரி transaction limits, பரிவர்த்தனை வகை மற்றும் கணக்கு சார்ந்த பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து பொருந்தும்.

2. UPI மூலம் பணம் பெறுவதற்கு கட்டணம் இல்லை

UPI மூலம் பணத்தைப் பெறுவதற்காக தனிநபர்கள் மீது நேரடி கட்டணம் விதிக்கப்படாது. அதேபோல், வாடிக்கையாளர்களிடமிருந்து UPI பணம் பெறும் வணிகர்களுக்கு பொருந்தும் கட்டணம், பரிவர்த்தனை வகை மற்றும் வணிகர் வகையைப் பொறுத்து மாறுபடும்.

3. ₹2,000 வரை வணிகப் பணப்பரிவர்த்தனைகள் இலவசம்

ஒரு தனிநபர் கடைகள் மற்றும் பிற வணிகர்களுக்கு ₹2,000 வரை UPI மூலம் பணம் செலுத்தும்போது MDR விதிக்கப்படாது. இதனால் அன்றாட சிறிய கொள்முதல்களுக்கு UPI தொடர்ந்து கட்டணமின்றி பயன்படுத்த முடியும்.

4. சிறு வியாபாரிகளுக்கு Zero-MDR சலுகை

UPI QR Code மூலம் Person-to-Person-Merchant (P2PM) வகையில் மாதத்திற்கு ₹1 லட்சம் வரை பணம் பெறும் தகுதியுள்ள சிறு வியாபாரிகளுக்கு அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் Zero-MDR சலுகை தொடரும்.

இதன் மூலம் தெருவோர வியாபாரிகள், சிறிய கடைகள் மற்றும் அன்றாட சிறு வணிகங்களில் ஈடுபடுபவர்கள் கூடுதல் MDR செலவிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.

5. தனிநபர்களுக்கு UPI பயன்பாடு தொடர்ந்து இலவசம்

தனிநபர்களுக்கான UPI பயன்பாட்டில் மாதாந்திர quota அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. P2P பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.

அதேநேரத்தில், பாதுகாப்பு மற்றும் அபாயக் கட்டுப்பாட்டுக்காக வங்கிகள் மற்றும் NPCI நிர்ணயிக்கும் தினசரி transaction limits தொடர்ந்து இருக்கும். இந்த வரம்புகள் கட்டண வரம்புகள் அல்ல; அவை பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.

UPI பயன்பாட்டில் முக்கிய மாற்றம் என்ன?

புதிய MDR கட்டமைப்பு அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிப்பதில்லை. P2P பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருப்பதுடன், ₹2,000 வரை உள்ள P2M பரிவர்த்தனைகளும், தகுதியுள்ள சிறு வியாபாரிகளின் Zero-MDR பரிவர்த்தனைகளும் இலவசமாக இருக்கும்.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, சுமார் 96 சதவீத வணிகர் UPI பரிவர்த்தனைகள் புதிய MDR கட்டமைப்பால் பாதிக்கப்படாமல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ASWATHTHAMAN N 0 followers