LATEST NEWS

கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது...

By ASWATHTHAMAN N • 2026-08-10 05:27 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது...

கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதே போன்ற கட்டுப்பாடுகள் போலீசார், அரசியல்வாதிகளுக்கும் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய், துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:


* திரைத்துறை முதலான கலைத்துறை பிரபலங்கள், முக்கிய நபர்கள் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக தெரியவந்தால் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்த உடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.


* அத்தகைய வருகையின்போது, திருக்கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும், காணொளி பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.


* பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில், அவர்களின் நுழைவு மற்றும் இயக்கம் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். திருக்கோவிலின் புனிதத் தன்மையும், மரபு சார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

* முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.


மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோவில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைத்துச் செயல் அலுவலர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய் கூறியுள்ளார்.


அரசியல்வாதி, போலீசுக்கு எப்போது?


ஒவ்வொரு முறையும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கோவிலுக்கு வரும்போது அவர்களுடன் 10 முதல் 20 பேரை அழைத்து வருகின்றனர். வரிசையிலும் காத்திருப்பதில்லை, டிக்கெட் எடுக்காமல் கூட்டமாக கோவிலுக்குள் செல்கின்றனர்.


தடுக்க வேண்டும்
இத்தகைய செயல், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது. டிக்கெட் எடுக்காத அரசியல் பிரமுகர்களை கோவில் அதிகாரிகள் கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

ASWATHTHAMAN N 0 followers