June 16, 2026

அகத்தியர் வரலாறு!!

தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர். இவர் பொதிகையில் தவம் செய்ததால் “பொதிகைமுனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றித் தமிழிலும், வடமொழியிலும் புராணக் கதைகள் பல உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், சோதிடம் உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் கருதப்படுகின்றார். இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும், சோதிட சாத்திரங்களும் உள்ளன. இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியது அகத்தியம் என்பர். இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்
வடக்கே இமயமலையும் தெற்கே பொதிகை மலையும் இவருக்கு ஒன்றே. தமிழும், மருத்துவமும், ஜோதிடமும், இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின.
பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.
தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் சரி, இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகளும் கூறப்படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்திரனின் சாபத்திற்கு ஆளாகிய ஊர்வசி பூலோகத்திற்கு வந்த சமயம் அவள் அழகில் மயங்கி மித்ரர் என்பவரும், வருணர் என்பவரும் காதல் வயப்பட்டனர். இதன் காரணமாக மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்து, சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றவர்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர். சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம். அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION