ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!
சென்னை பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சென்னை ஐஐடியின் பள்ளி இணைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சிக்கு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
மாணவர்கள் பல்வேறு தொழிற் துறைகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், 11,12-ம் வகுப்புகளில் தங்களுக்குப் பொருத்தமான பாடப்பிரிவுகளைத் தன்னம்பிக்கையுடன் தேர்வுச் செய்யவும் இத்தகைய ஆரம்பக்கட்ட அறிமுகப் பயிற்சி உதவுகிறது.
இந்த திட்டம், சென்னை ஐஐடி அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Centre for Outreach and Digital Education - CODE) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் https://code.iitm.ac.in/schoolconnect/ என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வாகும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்கும். இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 8 வாரங்களுக்கு ஆன்லைனில் கற்பிக்கப்படும். பயிற்சியின் நிறைவில் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் இதுவரை வெளிநாடுகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உட்பட 4,900-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த 1.75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள 25,000 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த சென்னை ஐஐடி அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டங்களின் அவசியம் குறித்து, சென்னை ஐஐடியின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் தலைவரான பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், "மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கு முன் பல்வேறு துறைகளைப் பற்றி ஆராய்ந்து, புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கவே பள்ளி இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தொடங்குகிறோம். ஆரம்ப கட்டத்தில் கிடைக்கும் இந்த அனுபவம், மாணவர்கள் தங்களின் ஆர்வத்தை கண்டறியவும், தெளிவான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. பெற்றோரும் இந்த திட்டம் பற்றி அறிந்து கொண்டு, வழக்கமான படிப்புகளைத் தாண்டித் தங்கள் குழந்தைகள் புதிய, சிறந்த துறைகளைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் வடிவமைக்க உதவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதேபோல், சென்னை ஐஐடி மெட்ராஸ் டீன் (கல்விசார் படிப்புகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், "மாணவர்களின் ஆர்வம், வாய்ப்புகளை புரிந்துகொள்ளுதல் ஆகியவை மிகப்பெரிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
பள்ளி இணைப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பல்வேறு துறைகளை ஆராயவும், தங்களது பார்வையை விரிவுபடுத்தவும், எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுகளை எடுக்கவும் நாங்கள் உதவ விரும்புகிறோம். மாணவர்களின் எதிர்காலத் தேவை சார்ந்து 17 பாடப் பிரிவுகள் வழங்கப்படுகிறது.
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, விண்வெளிப் பொறியியல், சைபர் பாதுகாப்பு, மின்னணு அமைப்புகள், வேதிப் பொறியியல், மூலக்கூறு பொறியியல், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, சட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி, மானுடவியல், சூழலியல், டிஜிட்டல் மானுடவியல், விளையாட்டுத் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் கணினியியல் மற்றும் பொறியியல் உயிரியல் அமைப்புகள் ஆகிய துறைகள் இதில் அடங்கும்.