தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்! முதல்வர் விஜய் வாழ்த்து!
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 15) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மாா்ச் மாதம் மாற்றப்பட்டாா். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆா்.வி. ஆா்லேகருக்கு தமிழகத்தின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 15) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது, ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் மற்றும் பிற அதிகாரிகளும் உடனிருந்தனர். அவருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
முன்பு தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவிக்கும், முன்பு ஆட்சியில் இருந்த திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதால் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த மே 10-ஆம் தேதி தவெக அரசு அமைந்ததும் ஆளுநா் ஆா்லேகருக்கும், முதல்வா் விஜய்க்கும் இணக்கமான சூழல் நிலவுதால், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.