AGRICULTURE

நினைவிருக்கிறதா அந்த நெல்லறுவடைத் திருவிழா?

By ASWATHTHAMAN N • 2026-07-20 05:54 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
நினைவிருக்கிறதா அந்த நெல்லறுவடைத் திருவிழா?

முன்பெல்லாம் நெல் அறுவடை என்றால் அது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே ஒரு பெரிய திருவிழா தான்! சொந்த பந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் ஒன்றாகக் கூடி களத்துமேட்டில் வேலை செய்யும் அழகே தனி.
​அதிகாலையில் அரிவாளுடன் கதிர் அறுக்கத் தொடங்கி, கட்டுகளாகக் கட்டித் தலையில் சுமந்து சென்று, களத்துமேட்டில் அடித்து, தூற்றி, அளந்து மூட்டை பிடிப்பது வரை குறைந்தது 10 நாட்களாவது ஆகும். அந்த 10 நாளும் ஊரில் ஒரு கல்யாண வீடு போல அத்தனை சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும்.
​நடுவரப்பில் அமர்ந்து, பனை ஓலைப் பெட்டியில் கொண்டு வரும் பழைய சோற்றையும், சின்ன வெங்காயத்தையும், சுட்ட கருவாட்டையும் அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடும் அந்தப் பகிர்வில் இருக்கும் ருசி... அமிர்தம்! களைப்புத் தெரியாமல் இருக்க பாடும் அறுவடைப் பாட்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் கேலிப் பேச்சுகளும் அந்த வயல்வெளியெங்கும் எதிரொலிக்கும். அறுவடை முடிந்து பொன் நிறமாக நெல் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, விவசாயியின் முகத்தில் பூக்கும் அந்தப் பெருமிதச் சிரிப்பு இன்று எங்கே தேடினாலும் கிடைக்காது.

கதிரடித்தல்:

திருமணம் ஆகாத இளவட்ட ஆண்கள் களத்தின் மையப்பகுதியில் ராட்சத கருங்கற்களைப் போட்டு, அதன்மீது கதிரை ஓங்கி அடித்து நெல்மணிகளை உதிர்ப்பார்கள்.
(4, 5 மணி நேரம் இடைவிடாது நடக்கும் இப்பணி க்கு சோர்வின்றி பணியாற்ற இளவட்டங்களையே முன்னிறுத்துவார்கள்)
பெண்கள் கட்டுகளைப் பிரித்து கை கொள்ளும் அளவிற்குச் சிறிது சிறிதாக நெற்கதிர்களைத் தூக்கி வீசுவர். அதனை தன்கையில் வைக்கோலால் திரிக்கப்பட்ட கயிற்றால் இலாவகமாகப் பிடித்து இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி கல்லின்மீது அடிப்பார்கள்.
நடுவே மதிய உணவு வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே ஆள் மாற்றி மாற்றி சாப்பிடுவார்கள். (பெரும்பாலும் சோளச்சோறும், பழைய அரிசிக் கஞ்சியுமே... இந்தக் கடின வேலைக்குத் தாங்கும்)

​ஆனால், இன்றைய இயந்திர வாழ்க்கையில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
​காலையில் ஒரு பிரம்மாண்டமான அறுவடை இயந்திரம் வயலுக்குள் இறங்குகிறது... சடசடவென அறுக்கிறது... நெல் ஒருபுறமும், வைக்கோல் ஒருபுறமுமாக கொட்டுகிறது. 10 நாள் திருவிழாவாக, பல மனிதர்களின் வியர்வையும் சிரிப்பும் கலந்து கொண்டாடிய ஒரு விஷயம், இன்று ஒரே நாளில் சில மணி நேரங்களில் சத்தமில்லாமல் முடிந்துவிடுகிறது.
​வேலை சுலபமாகிவிட்டது, விவசாயிகளுக்கு கூலிச் செலவும் நேரமும் மிச்சமாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மைதான். இயந்திரங்களின் வரவு காலத்தின் கட்டாயம்.
​ஆனால், அந்த மண்ணின் வாசனையோடு கலந்த மனித உறவுகளின் நெருக்கத்தையும், அந்தத் திருவிழாக் கொண்டாட்டத்தையும் சேர்த்தே இந்த இயந்திரங்கள் அறுவடை செய்துவிட்டதே என்ற ஏக்கம் அடிமனதில் எழத்தான் செய்கிறது.
​காலம் மாறிவிட்டது... அந்த நாட்களும் இனித் திரும்பி வராது... நினைவுகள் மட்டுமே நமக்குச் சொந்தம்!

ASWATHTHAMAN N 0 followers