மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.2.42 கோடி மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வழங்கினார்...
தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களுக்கும் அரசுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு நேரில் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொடர்பு திட்ட முகாமின் முக்கிய நோக்கங்கள்அரசின் நலத்திட்டங்களை கிராம மக்களுக்கு கொண்டு சேர்த்தல்.பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனுக்குடன் தீர்வு காணுதல்.அரசுத் துறை சார்ந்த உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மலிலியங்கரணை பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.2.42 கோடி மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வழங்கினார். அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. அதில் 500 மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், வருவாய் துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 48 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அதைதொடநர்து, இயற்கை மரணம் உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை 24 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை ஆறு பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்று பயனாளிகளுக்கு வீல் சேர், ஒருவருக்கு காது கருவி வழங்கப்பட்டது.
கூட்டுறவுத் துறை சார்பில், மகளிர் சுயஉதவி குழு கடன், 29 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், ‘தாட்கோ’ மூலம் முதல்வரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானியத்துடன் நலத்திட்ட உதவிகள் இரண்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு வங்கிக் கடன் இரண்டு பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மானியத்துடன்கூடிய வேளாண்மை இடு பொருட்கள் ஐந்து பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
மருத்துவத்துறை சார்பில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மூன்று பயனாளிகளுக்கு, தோட்டக்கலை மற்றம் மலைப்பயிர்கள் துறை சார்பில், நுண்ணீர் பாசனம் ஒருவருக்கு, சமூகநலத்துறை மூலம் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் இரண்டு பயனாளிகளுக்கு என, மொத்தம் 126 பயனாளிகளுக்கு 2 கோடியே 42 லட்சத்து 31,816 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று வழங்கினார்.
இம்முகாமில் கலெக்டர் சினேகா, ‘50 மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்’ என்றார்.