சென்னை: தமிழக அரசு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (TAPS/CPS) தொடர்பான முழுமையான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் வகையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாணையின்படி, 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில், தகுதியுள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10,000, இதில் எது அதிகமோ அந்தத் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், இந்தத் தொகையுடன் 60 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து மாதாந்திர இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. இதற்கிடையில், புதிய ஓய்வூதிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ஓய்வு பெற்ற சில ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஓய்வூதிய விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வரும் வரை இந்த இடைக்கால ஏற்பாடு தொடரும் என கூறப்பட்டுள்ளது.