June 20, 2026

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 குறித்து பட்ஜெட் விவாதத்தில் விளக்கம் அளிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் சம்பத் குமார், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விவகாரம் குறித்து அரசு நிதி மற்றும் நிர்வாக ரீதியான அம்சங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், தற்போது அவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மட்டுமே நடைபெற்று வருவதால், உறுப்பினர்கள் அதுகுறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்றும், மகளிர் உரிமைத் தொகை உயர்வு, புதிய பயனாளிகள் சேர்க்கை மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரவிருக்கும் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது எடுத்துரைக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் ராஜன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேகதாது பிரச்சினை தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அரசின் அடுத்த கட்ட அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION